
புத்ரா ஜெயா , ஜூன் 2 – பிரதமர் துறையின் கீழ் செயல்படும் மலேசிய இந்திய சமூக உருமாற்ற பிரிவான மித்ரா 20 மில்லியன் ரிங்கிட் செலவில் மேலும் 4 புதிய முன்னெடுப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது. டிரோன் உட்பட தொலைதூர நவீன கருவிகளைக் கையாள்வது, மின்சார இயக்க கார்கள் பழுது பார்ப்பது மற்றும் விமான தொழிழ்நுட்பத் துறையில் B40 பிரிவைச் சேர்ந்த இந்தியர் இளைஞர்களுக்கு பயிற்சி ஏற்பாடுகளை வழங்கி அவர்களுக்கு வேலை வாய்ப்பையும் உறுதிப்படுத்துவது உட்பட நாட்டிலுள்ள 527 தமிழ்ப்ப்ள்ளிகளுக்கு Google நிறுவனத்தின் மறுசுழற்சி செய்யப்பட்ட 6,000 மடிக்கணினிகளை வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மித்ரா முன்னெடுத்துள்ளதாக மித்ரா சிறப்புப் பணிக்குழுவின் தலைவர் டத்தோ R. ரமணன் அறிவித்திருக்கிறார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சேவை மைய ஒத்துழைப்புடன் இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டத்தையும் மித்ரா தொடங்கியுள்ளது. 38 மாவட்டங்களில் 72 நாடாளுமன்ற தொகுதிகளில், அதிகமான இந்தியர்கள் இருக்கும் பகுதிகளில் மனித வள மேம்பாடு, தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் சமூக நல மேம்பாட்டுத் திட்டங்களை அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்புனர்களின் ஒத்துழைப்போடு அமல்படுத்தப்படும். இதற்காக 7.2மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதையும் அவர் தெரிவித்தார். மித்ரா அமல்படுத்தப்படவிருக்கும் இந்த திட்டங்கள் குறித்து இன்று காலையில் புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் டத்தோ ரமணன் விளக்கம் அளித்தார்.
அதோடு இதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட மித்ராவின் முன்னெடுப்புகள் பற்றிய தற்போதைய நிலவரம் குறித்தும் டத்தோ ரமணன் தெளிவுப்படுத்தினார். அறிவிக்கப்பட்ட மித்ராவின் முன்னெடுப்புகளைக் கவனத்தில் கொண்டு இந்திய சமுதாயம் குறிப்பாக இளைஞர்கள் விரைவாக அந்த வாய்ப்புகளைப் பற்றிக் கொண்டு வாழ்க்கையில் மேம்பாடு காண முன்வர வேண்டும் என டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.