கெப்போங், மே 2 – செல்லப் பிராணிகளின் மீது அதிக ஆசை கொண்டவர்கள் தங்களின் செல்லங்களை பெட் குரூமிங்கிற்கு அழைத்து சென்று அவற்றை சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்வது தற்போது பிரபலம்.
இந்நிலையில், வணிக மயமான இன்றைய நடைமுறையில் குறிப்பாக இந்தியர்கள் பலர் இந்த பெட் குரூமிங் சார்ந்த தொழிலில் மிகவும் குறைந்து காணப்படுகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு கோலாலம்பூரில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவ மையம், மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவு, மித்ராவுடன் இணைந்து பெட் குரூமிங் பயிற்சியை அண்மையில் ஏற்பாடுச் செய்திருந்தது.
பிராணிகள் பற்றி அறிந்து கொள்ளுதல், அதனை அலங்கரிக்கும் முறை, உடல் நலம் கவனிக்கும் வழிமுறைகள், பிராணிகளுக்குப் பயன்படுத்தும் அலங்காரப் பொருட்கள், என 50 நாட்களுக்கு செல்லப் பிராணிகளை பராமரிக்கும் இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் கலந்து வெற்றிகரமாக பயிற்சியினை முடித்த 50 மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி நற்சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
அப்பட்டமளிப்பு விழாவில் மித்ராவின் தலைமை இயக்குநர் ரவிக்குமார் சுப்பையா, மித்ராவின் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு பிரிவின் உதவி இயக்குநர் சூரிய தேவி அகியோர் கலந்து சிறப்பித்தனர்.
செல்லப் பிராணிகளை வளர்க்கும் பலருக்கு வேலைப்பளு மற்றும் நேரமின்மை என்பதால் அவைகளை பராமரிக்க குரூமிங் ஸ்பா தற்போது அனைவருக்கும் தேவைப்படும் ஒன்றாகவிட்டது.
ஆகையால், இந்த பயிற்சியின் வழி நமது சமுதாயத்தினரும் இனி பெட் குருமிங் தொழிலில் அதிகமாக ஈடுபட்டு, கூடுதல் வருமானம் பெற்று மித்ராவின் சமுதாய உருமாற்று நோக்கத்தை அடையமுடியும் என ஏற்பாட்டுக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.