கோலாலம்பூர், ஏப்ரல்-5, மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 100 மில்லியன் ரிங்கிட் நிதி, இந்நாட்டு இந்தியர்களைக் கரைச் சேர்க்க போதுமா என பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்னமும் பின் தங்கியுள்ள இந்தியச் சமுதாயத்தின் நலன் காக்க, 100 மில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது கடலில் விழுந்த சிறு துளிகள் போன்றது என பினாங்கு மாநில முன்னாள் துணை முதல் அமைச்சருமான அவர் ஏமாற்றத்துடன் கூறினார்.
அந்த 100 மில்லியன் என்பது உதவித் தேவைப்படும் குறிப்பாக B40 இந்தியச் சமூகத்துக்கு மொத்தமாகப் போய்ச் சேரப்போவதில்லை; காரணம் குறிப்பிட்ட சில நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காகவும் அந்நிதி பயன்படுத்தப்படுகிறது என்றார் அவர்.
உண்மையில் 2 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டால் மட்டுமே இந்தியச் சமூகம் முழு பயனடைய முடியும்; அதற்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆவன செய்வாரா என டாக்டர் ராமசாமி கேட்டார்.
PH-BN அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள இந்தியத் தலைவர்கள் சமூகத்துக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு கேட்காமல் வாய் மூடி மௌனியாக இருப்பது ஏன் என தமக்கு விளங்கவில்லை என்றார் அவர்.
மித்ராவை யார் கட்டுப்பாட்டில் வைப்பது என்பதில் அவர்கள் ஈடுபாடு காட்டுகிறார்களே தவிர, அடிப்படை விஷயத்தைப் பற்றிக் கவலைக் கொள்ளவில்லை என ராமசாமி சாடினார்.
மித்ரா, பிரதமர் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதோ, அல்லது ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் இருப்பதோ இங்கு முக்கியமல்ல.
மாறாக ஒதுக்கப்படும் நிதி ஆக்ககரமாகப் பயன்படுத்தப்படுகிறதா, அதைவிட முக்கியமாக உரியவர்களுக்கு அது முறையாகச் சென்று சேருகிறதா என்பதே முக்கியம் என தனது Facebook-கில் வெளியிட்ட அறிக்கையில் ராமசாமி சுட்டிக் காட்டினார்.
எனவே, இந்நாட்டு பிள்ளைகள் எல்லோரும் என் பிள்ளைகள் என்ற பிரதமர் அன்வாரின் தாரக மந்திரம் உண்மையென்றால், மித்ரா வாயிலாக இந்தியச் சமூகத்துக்கு அவர் குறைந்தது 2 பில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்க முன்வர வேண்டும்.
அதோடு, அரசியல்வாதிகளுக்குப் பதிலாக, கை சுத்தமான மற்றும் பொறுப்புணர்வுமிக்க சுயேச்சை தனிநபர்கள் மித்ராவுக்குத் தலைமையேற்ற வேண்டும் என டாக்டர் ராமசாமி பரிந்துரைத்தார்.
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு மித்ரா ஒருமைப்பாட்டு அமைச்சில் இருந்து பிரதமர் துறையின் கட்டுப்பாட்டுக்குத் திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.