
கோலாலம்பூர், மார்ச் 13 – 2021 –ஆம் ஆண்டு முதல் 2022 –ஆம் ஆண்டு வரை , மித்ரா இந்தியர் உருமாற்றுத் திட்டம் தொடர்பில், MACC – ஊழல் தடுப்பு ஆணையம் 33 விசாரணை அறிக்கைகளைத் திறந்தது.
அதில் பத்து விசாரணை அறிக்கைகளில் தொடர்புடையவர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக, சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை துணயமைச்சர் ராம் கர்ப்பால் சிங் தெரிவித்தார்.
இதனிடையே மித்ரா தொடர்பில் இன்னும் விசாரணைகள் தொடர்வதாகவும் அவர் கூறினார்.
மக்களவையில், மித்ரா நிதி மோசடியில் சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது , மற்றும் அந்த நிதி தொடர்பில் கணக்காய்வு விசாரணை மேற்கொள்ளப்படுகிறதா என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் மற்றும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN Rayer எழுப்பிய கேள்விக ளுக்கு துணையமைச்சர் பதிலளித்தார்.
நிதி மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டுவதோடு, மித்ரா நிதியை கையாளும் நடைமுறையில் ஏற்பட்டுள்ள பலவீனங்களை சோதனையிடும் நடவடிக்கையை அரசாங்கம் எடுத்திருப்பதாக அவர் கூறினார்.
அதோடு, மித்ராவில் ஊழல், அதிகார முறைகேடு, மோசடி போன்றவை ஏற்படுவதற்கான சாத்தியங்களைக் களையும் பரிந்துரைகளையும் MACC முன் வைத்துள்ளதாக அவர் கூறினார்.
இவ்வேளையில், மித்ரா தொடர்பில் கையூட்டு, அதிகார முறைகேடு, மோசடி தொடர்பில் தகவல் இருப்பவர்கள் அதனை அரசாங்கத்திடமும் MACC – யிடமும் முன் வைக்க வரவேற்கப்படுவதாக ராம் கர்ப்பால் சிங் கூறினார்.
இதனிடையே, மித்ரா மோசடியில் சம்பந்தப்பட்ட சிலர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், அவர்கள் பெரும்பாலும் சிறிய மீன்களே எனவம், பெரிய மீன்களையும் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுக்கும்படி எம். குலசேகரன் கேட்டுக் கொண்டார்.