Latestமலேசியா

மின்சாரம் தாக்கியே வினோசினி உயிரிழந்தார் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை; UUM பதில் மனு

அலோர் ஸ்டார், மே-8 –  UUM எனப்படும் வட மலேசியப் பல்கலைக்கழக மாணவி எஸ். வினோசினி ஈராண்டுகளுக்கு முன்னர் மின்சாரம் பாய்ந்தே உயிரிழந்தார் என்பதற்கான நிரூபிக்கப்பட்ட ஆதாரம் எதுவும் இல்லை என, அப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

போலீசாரின் பிரேத பரிசோதனை அறிக்கை, எரிசக்தி ஆணையத்தின் சுயேட்சை விசாரணை அறிக்கை என எதிலுமே அப்படிக் கூறப்படவில்லை என UUM சுட்டிக் காட்டியது.

3.05 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கேட்டு வினோசினியின் தந்தை தொடர்ந்துள்ள வழக்கில் தற்காப்பு வாதமாக, UUM அவ்வாறு தெரிவித்தது.

மாறாக, இருதயக் கோளாறால் உயிரிழக்கும் வாய்ப்பை அதிகரிகக் கூடிய Fibrosis Miokardium எனும் ஒரு வகை நோயால் 20 வயது வினோசினி பாதிக்கப்பட்டிருந்ததாக UUM தனது பதில் மனுவில் கூறிக் கொண்டுள்ளது.

எனவே, மின்சாரம் தாக்கியே வினோசினி உயிரிழந்தார் என மரண விசாரணை நீதிமன்றம் கடந்தாண்டு பிப்ரவரியில் அளித்த தீர்ப்பையும் UUM கேள்வி எழுப்பியுள்ளது.

பிரதிவாதி மற்றும் எரிசக்தி ஆணையத்தின் அறிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் மரண விசாரணை நீதிமன்றம் எப்படி அம்முடிவுக்கு வரலாம் என கேட்கும் UUM, பின்னர் விசாரணை நடைபெறும் போது அவற்றை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப் போவதாகக் கூறியது.

மரண விசாரணை நீதிமன்றத்தின் அத்தீர்ப்பை ரத்துச் செய்யக் கோரும் UUM-மின் மனு அலோர் ஸ்டார் உயர் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கெடா, சின்தோக்கில் UUM பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் தங்கும் விடுதி அறையில் 2022-ஆம் ஆண்டு மே மாதம் வினோசினி இறந்துக் கிடக்கக் கண்டெடுக்கப்பட்டார்.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனக்குறைவு மற்றும் அலட்சியம் காரணமாவே தனது மகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகக் கூறி, வினோசினியின் தந்தை ஆர். சிவக்குமார் UUM-முக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!