
கோலாலம்பூர், பிப் 4 – இவ்வாண்டு ஜூலையில் மின் கட்டண உயர்வு என்பது தொழில்துறைக்கு மட்டுமே இருக்கும் என்றும், 85 விழுக்காடு வழக்கமான பயனீட்டாளர்களை இது உட்படுத்தாது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் விளக்கம் அளித்திருக்கிறார். நேற்றைய ஊடக அறிக்கையை தெளிவுபடுத்திய அவர், ஒரு கூட்டத்தில் தான் தெரிவித்த பதில், தொழில்துறையினர் எழுப்பிய பிரச்சினையை மட்டுமே குறிப்பிட்டதாக சுட்டிக்காட்டினார். ஆனால் சில தரப்பினர் மக்களின் வெறுப்பையும் கோபத்தையும் விதைக்க தனது அறிக்கையைத் திரித்துவிட்டனர் என அவர் சுட்டிக்காட்டினார். தொழில்துறையின் மின் கட்டண உயர்வு 14 விழுக்காடுவரை இல்லை.
இந்த உயர்வால் 85 விழுக்காடு மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று நாடாளுமன்றத்தில் மாச்சாங் பெரிக்காத்தான் நேசனல் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அகமட் ஃபய்சல் ( Wan Ahmad Fayhsal) எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது அன்வார் தெரிவித்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி உறுதியானது மற்றும் முந்தைய நிர்வாகத்துடன் ஒப்பிடும்போது முதலீடு அதிகரித்துள்ளது என்பதே உண்மை. எங்கள் வளர்ச்சி விகிதம் உறுதியளிக்கிறது, நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலையிலும் ரிங்கிட்டின் மதிப்பு இன்னும் வலுவாக உள்ளது என்று அவர் கூறினார்.