
கோலாலம்பூர், செப் 25 – இளம் கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களை மேடையேற்றுவதற்காக மின்னல் பண்பலை வானொலி ஏற்பாடு செய்த “பிந்தாங் மின்னல் 2023” போட்டியில் நிமலன் கங்காதரன் முதல் பரிசான 10,000 ரிங்கிட் தொகையை வென்றார். ஐயையையோ ஆனந்தமே என்ற பாடலை பாடியதற்காக அவர் வெற்றியாளராக தேர்வு பெற்றார். ஆறு போட்டியாளர்கள் கலந்துகொண்ட இறுதிச் சுற்றில் மலாக்காவைச் சேர்ந்த 22 வயது இளைஞரான நிமலன் காங்காதரன் முறைப்படி சங்கீதம் பயிலவில்லை என்றாலும் இசையின் மேல் ஏற்பட்ட ஆர்ரவத்தால் தனது சகோதரருடன் இணைந்து இசை நுட்பங்கள் மற்றும் கீ போர்ட் இசைக்கருவியில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலாலம்பூர், அம்பாங்கைச் சேர்ந்த 22 வயது ராஜஸ்ரீகோபி 2ஆவது இடத்தை பெற்றதன் மூலம் 7,000 ரிங்கிட் பரிசுத் தொகையை வென்றார்.
சிலாங்கூர் சுபாங் ஜெயாவைச் சேர்ந்த 21 வயதுடைய ஸ்வேதா நாயர் மூன்றாவது இடத்தை பெற்று ஐயாயிரம் ரிங்கிட்டை தட்டிச் சென்றார். நான்காவது பரிசான நடுவர் குழுவின் தேர்வாக பாரத் நாயர் மூவாயிரம் ரிங்கிட் பரிசைப் பெற்றார். மேலும் ஜீவா மற்றும் சுருதி ஆறுதல் பரிசுகளை பெற்றனர். இப்போட்டியின் நடுவராக Santhesh, Shamesan Manimaran , Tharani Kumar ஆகியோர் பணியாற்றினர். வானொலிப் பிரிவின் இயக்குனர் Saifuzzaman Yusop, ஆர்.டி.எம் ஒலிபரப்பு இயக்குனர் டத்தோ Suhaimi Sulaiman ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.