புத்ராஜெயா, டிசம்பர்-27, மின்சாரக் கட்டண உயர்வு மக்களைப் பாதிக்கும் வகையிலிருப்பதை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.
கட்டண விகித உயர்வு பெரும்பான்மை மக்கள் மீது திணிக்கப்படக் கூடாது; மாறாக, பெரும் பணக்காரர்கள் அல்லது கொள்ளை இலாபம் பார்க்கும் தொழில்துறையினருக்குத் தான் விதிக்கப்பட வேண்டுமென்றார் அவர்.
மின்சாரக் கட்டண விகிதத்தை அடுத்தாண்டு ஜூலை முதல் 14.2% அதிகரிக்க TNB பரிந்துரைத்திருப்பதாக வெளியான செய்தி குறித்து, டத்தோ ஸ்ரீ அன்வார் கருத்துரைத்தார்.
TNB-யின் செலவின உயர்வை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது; ஆனால் அதற்காக மக்களிடம் சுமையைத் திணிக்க முடியாது.
இந்நிலையில் TNB-யிடம் விளக்கம் கேட்குமாறு துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா யூசோஃபை பிரதமர் பணித்துள்ளார்.
அடுத்தாண்டு ஜூலை முதல் தீபகற்ப மலேசியாவில் அடிப்படை மின்சாரக் கட்டணத்தை 14.2 விழுக்காடு உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, பங்குச் சந்தைக்கு வழங்கிய அறிக்கையில் முன்னதாக TNB குறிப்பிட்டிருந்தது.
புதியக் கட்டண விகித பரிந்துரை அட்டவணையின் படி, ஒரு கிலோ வாட் மணி மின்சாரம் 45.62 சென்னாகும்.
என்றாலும், அடுத்தாண்டின் முதல் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டண விகிதத்திலும் அமைப்பிலும் மாற்றமிருக்காது.
அதாவது, புதியக் கட்டண விகிதத்துடன் தங்களைப் பழக்கிக் கொள்ள பயனீட்டாளர்களுக்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்படுமென TNB விளக்கியிருந்தது.