Latestஉலகம்

மியன்மார்: அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்து ஐவர் பலி 

யாங்கோன், மே 4 – மியன்மாரில் அஞ்சல் மூலமாக வந்த வெடிகுண்டு வெடித்து ஐவர் கொல்லப்பட்டனர்.  கொல்லப்பட்டவர்களில்,  பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி உட்பட ,  அந்நாட்டின் ராணுவ அரசாங்கத்திற்கு எதிராக திரும்பிய மூன்று போலீஸ் அதிகாரிகளும்  அடங்குவார்கள்.

கடந்த பிப்ரவரி முதலாம் தேதி, ஆங் சான் சூ ஜி தலைமையிலான அரசாங்கத்தை ராணுவம் கைப்பற்றியதை அடுத்து, மக்கள் வீடமைப்பு பகுதிகளில் சிறு வெடிப்பு சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கின.

அந்த தாக்குதல்கள் சில நேரங்களில் அரசாங்க அலுவலகங்களையும், ராணுவ தளங்களையும் குறி வைத்து மேற்கொள்ளப்பட்டன.

ஆகக் கடைசியாக, ஐவர் கொல்லப்பட்ட வெடிப்பு சம்பவம், மியன்மாரின் மேற்கேயுள்ள பாகோ-வில் (Bago) உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்தது.

அந்த கிராமத்தில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்த வேளை,  வீட்டிற்கு அஞ்சல் மூலமாக  அனுப்பப்பட்டிருந்த  வெடிகுண்டு வெடித்து, ஆங் சான் சூ ஜி –யின் கட்சியைச் சேர்ந்த  மக்கள் பிரதிநிதி ஒருவர் கொல்லப்பட்டார்.

அந்த தாக்குதலில்  போலீஸ் அதிகாரி ஒருவரின் கை ஒன்று துண்டாகி அவர் கடுமையான காயங்களுக்கு இலக்கானதாக, அந்நாட்டு உள்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்நாட்டில், ராணுவ அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும்  ஆர்ப்பாட்டங்களிலும், வன்செயல்களிலும் இதுவரை  நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!