
மலாக்கா, நவ 27 – மியன்மாரைச் சேர்ந்த ஆறு தொழிலாளர்களால் தாக்கப்பட்டு 28 நாள் அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடி வந்த முரளி குப்புசாமி
நேற்று உயிரிழந்தார். 50 வயதுடைய முரளி 11 முதல் 24 வயதுடைய தமது ஆறு பிள்ளைகள் முன்னிலையில் நேற்று மாலை மணி 5.57 அளவில் இறந்தார். அக்டோபர் 31-ஆம் தேதி முதல் மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் மரணம் அடைந்ததை உறுதிப்படுத்திய மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ Zainol Samah, கொலை குற்றச்சாட்டு தொடர்பில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
சுயநினைவற்ற நிலையில் முரளியையும் அவரது 19 வயது மகன் எம்.கே டேனியலையும் தாக்கியதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று மியன்மாரைச் சேர்ந்த ஆறு தொழிற்சாலை ஊழியர்கள் மீது ஆயர் கெரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. எனினும் அவர்களிடம் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.