கோலாலம்பூர், செப்டம்பர் 21 – மாணவர்களின் எழுதுதல், வாசித்தல், எண்ணுதல் ஆகிய அடிப்படை திறன்களை உறுதி செய்யும் வகையில் 6ஆம் ஆண்டு மற்றும் படிவம் 3ஆம் மாணவர்களுக்கான தேசிய நிலை தேர்வுகளான UPSRம் PT3 தேர்வுகளை மீண்டும் அமலுக்கு கொண்டு வரும் பரிந்துரையை கல்வியமைச்சு பரிசீலிக்க வேண்டும் என துணைப் பிரதமர் ஷாஹிட் ஹமிடி ம.இ.கா பொதுப் பேரவையில் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நாட்டில் ஆங்காங்கே இது தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
இந்நிலையில், 2021ஆம் ஆண்டு UPSR தேர்வு 2022ஆம் ஆண்டு PT3 தேர்வும் அகற்றப்பட்டதனால் மாணவர்கள் எதிர்நோக்கும் பாதிப்புகள் என்ன என்பது குறித்து இவ்வாறு விளக்கமளிக்கிறார் தமிழ்ப்பள்ளிகளுக்கான முன்னாள் முதன்மை அமைப்பாளர் பாஸ்கரன் சுப்ரமணியம்.
இதனிடையே மாணவர்கள் தங்களின் தொடக்க கல்வியை முடித்து விட்டு, இடைநிலைப்பள்ளியில் முதலாம் படிவத்திற்கு செல்வதற்கு முன்னர் அவர்களின் ஆறு ஆண்டு கால கல்வியின் அடைவு நிலையை மதிப்பீடும் வகையில் UPSR தேர்வு விளங்கியது.
அதுபோல், இடைநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் தங்களின் அடுத்த கல்வி இலக்கை உறுதி செய்வதற்கு அவர்களின் ஆற்றலையும் பலவீனத்தையும் கண்டறிவதற்கு PT3 தேவையானதாக இருந்தது.
இந்நிலையில், அதை மாற்றி PBS எனப்படும் பள்ளி அடிப்படையிலான மதிப்பீடும், வகுப்பறை மதிப்பீட்டு முறையும் கொண்டு வரப்பட்டன.
இந்த பள்ளி மற்றும் வகுப்பு சார் மதிப்பீட்டு தேர்வுகள் ஒரு மாணவரின் முழு ஆற்றலையும் வெளிப்படுத்துகிறதா என்பது பரவலாக கேட்கப்படும் கேள்வியாக இருகிறது.
பள்ளி மற்றும் வகுப்பு சார் மதிப்பீட்டு தேர்வுகள் ஒரு மாணவரின் உண்மையான அடைவுநிலையைக் கண்டறிய உதவுவதில்லை என்றார் தமிழ்க்கல்வி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேலன்.
இந்த நடைமுறையினால், மாணவர்களின் போட்டியாற்றல் குன்றி விட்டது கண்கூடான உண்மையாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தேர்வுகள் மட்டும் இரத்து செய்யப்படாமல் இருந்திருந்தால், தேர்வினை முன்னோக்கி சுய கால அட்டவணையைப் பின்பற்றுதல், பாடங்களை மீள்பார்வை செய்தல், கடந்தாண்டு கேள்வித் தாட்கள், பயிற்சி கேள்விகள் என மாணவர்கள் தங்களைத் தயார் செய்வார்கள்.
எனவேதான், இந்த தேர்வின் வாயிலாகக் கிடைக்கப்பெறும் நன்மைகளிலிருந்து மாணவர்கள் விடுபடாமலிருக்க வேண்டும் என்ற உன்னத நோக்கில், ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் சுயமாகவே மாணவர்களுக்குத் தேர்வினை நடத்த திட்டமிட்டிருப்பதாக அதன் கல்வி பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ கணேஷ் தெரிவித்தார்.
தற்போது அமலில் இருக்கு தேர்வில்லா கல்வி முறை “holistic approach” அதாவது பொதுநிலையிலான அணுகுமுறை. இந்த அணுகுமுறை நன்மையானது என்றாலும் , மாணவர்களின் கல்வித் திறனை மதிப்பிட அரசாங்க அளவில் நடத்தப்படும் தேசிய நிலையிலான தேர்வுகள் அவசியம்.
மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது ஒழுக்கத்தில் சிறந்தவர்களாகவும், வருங்காலத்தில் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தைப் தேர்வுகள் உருவாக்கும் என்பது பொதுமக்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் சிலவற்றின் நிலைப்பாடாகும்