
பேங்கோக், ஆகஸ்ட்டு 22 – முகநூல் சமூக ஊடகத்தில் பரவலாக காணப்படும் மோசடி நடவடிக்கைகளுக்கு எதிராக, மேத்தா (Meta) உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால், தென்கிழக்காசியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக திகழும் தாய்லாந்தில், முகநூல் சமூக ஊடகத்திற்கு முழுமையாக தடை விதிக்க வேண்டுமென கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படுமென, அந்நாட்டு இலக்கவியல் பொருளாதார மற்றும் சமூகவியல் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தாய்லாந்தில் முகநூல் மோசடி நடவடிக்கைகளால் இதுவரை இரண்டு லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கபட்டுள்ளனர்.
முகநூலில் மோசடி விளம்பரங்கள் அல்லது பதிவுகளை அடையாளம் கண்டு, அவற்றை உடனடியாக அகற்றுமாறு, தாய்லாந்து அரசாங்கம் பல முறை மேத்தாவிடம் கோரிக்கைகளை முன் வைத்துவிட்டது.
எனினும், அந்த பிரச்சனைக்கு தீர்வு பிறந்த பாடில்லை. அதனால் நீதிமன்ற நடவடிக்கை மட்டும்தான் இனி அதற்கு ஒரே தீர்வென அந்நாட்டு இலக்கவியல் அமைச்சு தெரிவித்தது.
மேத்தாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ஏதுவாக, போதுமான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அது குறித்து மேத்தா இன்னும் எந்த ஒரு கருத்தையும் வெளியிடவில்லை.