
கோலாலம்பூர், நவம்பர் 21 – நாட்டின் நீதித் துறை குறித்து, அவதூறான கருத்தை தமது முகநூலில் பதிவிட்ட, திரங்கானு பெர்சத்து கட்சி தலைவர் டத்தோ ரசாலி இட்ரிஸ் போலீஸ் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
நீதித்துறை முடிவுகள் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுவதாக, கிஜால் சட்டமன்ற உறுப்பினருமான ரசாலி தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாக புகார் பெறப்பட்டுள்ளதாக, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஸ்ரீ முஹமட் சுஹைலி முஹமட் ஜாயின் தெரிவித்தார்.
இம்மாதம் பத்தாம் தேதி, திரங்கானு, கெமமான் இடைத் தேர்தல் இயந்திரத்தை தொடக்கி வைத்த பின்னர் அவர் அந்த கூற்றை பதிவிட்டதாக நம்பப்படுகிறது.
அந்த பதிவு நான்கு நாட்களுக்கு பின்னர், @WANCIN11 எனும் டிக் டொக் கணக்கில் பகிரப்பட்டதை தொடர்ந்து வைரலானது.
அதனால், ரசாலிக்கு எதிராக நிந்தனை சட்டம் மற்றும் தொடர்பு பல்லூடக சட்டங்களுக்கு கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுவதையும் சுஹைலி உறுதிப்படுத்தினார்.