
கோலாலம்பூர், பிப் 19 – முகநூலில் பங்கு முதலீடு மோசடி கும்பலின் நடவடிக்கையினால் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த குமஸ்தா ஒருவர் 1 மில்லியன் ரிங்கிட்டை இழந்தார். 65 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண் குமாஸ்தாவிடமிருந்து போலீஸ் புகார் பெற்றுள்ளதை சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேய்ன் ஒமார் கான் உறுதிப்படுத்தினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முகநூலில் Baird என்ற பெயரைக் கொண்ட முகநூல் பங்கு முதலீட்டு குழுமத்தில் தாம் இணைந்ததோடு Wendy Lim என்ற பெயரைக் கொண்ட தனிப்பட்ட நபர் ஒருர் WhatsApp புலனத்தில் தனது பெயரை இணைந்தததாக பாதிக்கப்பட்டவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
முதலீடு செய்த பணத்திற்கு 40 விழுக்காடு வருமானம் கிடைக்கும் என தனக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டதால் மூன்று வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 1 மில்லியன் ரிங்கிட் பட்டுவாடா செய்யும்படி அப்பெண் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
பிப்ரவரி மாதத்தில் முதலீட்டுக்கான ஆதாயத்தை மீட்டுக்கொள்வதற்கு முயன்றபோது அதற்கு முன்னதாக மேலும் கூடுதலாக 309,208 ரிங்கிட் முதலீடு செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தப்பட்டார்.
வாக்குறுதி அளிக்கப்பட்டதுபோல் லாபம் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்த பின்னர்தான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அந்த பெண் போலீசில் புகார் செய்துள்ளார் என உசேய்ன் தெரிவித்தார்.