புக்கிட் ஜாலில், ஆகஸ்ட் -28 – சரவாக் சுக்மா போட்டியில் பதக்கம் வென்ற திரங்கானு முக்குளிப்பு வீராங்கனைகள் இருவரும், மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் மலேசிய விளையாட்டுப் பள்ளியில் தங்களின் அன்றாட பயிற்சியைத் தொடரவிருக்கின்றனர்.
இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் ஹானா இயோ (Hannah Yeoh) அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அடுத்து வரும் போட்டிகளிலும் அடைவு நிலையில் முன்னேற்றம் காணப்படும் பட்சத்தில், அவ்விருவரும் தேசிய இளையோர் அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு அடையாளம் காணப்பட்டிருப்பதாக ஹானா சொன்னார்.
வருங்காலத்தில் தேசிய முக்குளிப்பு அணியிலும் மிளிருவதற்கான ஆற்றல் அவர்களிடமிருப்பதாக அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
Uzlifatil Jannah Ashraf மற்றும் Ilyssa Ixora Imran இருவரும், மாநில விளையாட்டு மன்றத்திற்குத் தெரியாமல், சரவாக் சுக்மா போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அண்மையில் சர்ச்சையில் சிக்கினர்.
ஆடை கோட்பாடுகளைப் பின்பற்றவில்லை என்பதால், முக்குளிப்புப் போட்டியில் திரங்கானு சார்பில் முஸ்லீம் பெண்கள் பங்கேற்க மாநில அரசால் தடை விதிக்கப்பட்டது.
ஆனால் தவறாகப் புரிந்து கொண்டு இருவரையும் போட்டிக்கு அனுப்பி வைத்து விட்டோம் எனக் கூறி, திரங்கானு அமெச்சூர் நீச்சல் சங்கம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளது.