
பிரிக்பீல்ட்ஸ், செப் 4 – முடிதிருத்தும், ஜவுளி, பொற்கொல்லர் துறைகளுக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் மீதான முடக்கம் நீக்கப்பட்டதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இவ்வாரம் வெள்ளிக்கிழமை நடைப்பெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘நாட்டில் வெளிநாட்டு ஊழியர்களை கொண்டுவரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முதலில் துறைக்கு தேவைப்படும் ஆட்பலத்தில் பாதி தொழிலாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கும் அனுமதி வழங்கப்படலாம்.
அதே சமயத்தில், உள்நாட்டவர்களையும் TVET பயிற்சியின் மூலம், இந்த துறைகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்’ என இன்று பிரிக்பீல்ட்ஸில் நடைப்பெற்ற Lestari Niaga நிகழ்ச்சியில் பேசியபோது அன்வார் இவ்வாறு கூறினார்.
இவ்விவகாரம் குறித்து மகஜர் தயாரிக்கப்பட்டுவிட்டது; அது இவ்வாரம் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட மனிதவள அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.
தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய துணைத் துறைகளுக்கு சுமார் 15,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்
வெளிநாட்டு தொழிலாளர் முடக்கத்தால் இந்த மூன்று துறைகளிலும், குறிப்பாக சிறு நடுத்தர வணிகத்தில் சுமார் 3,000 தொழில்முனைவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செனட்டர் சரஸ்வதி தெரிவித்தார் .
இந்நிகழ்வில் ம.இ.கா-வ்வின் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ சரவணனனும் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
பிரிக்பீல்ட்ஸ்க்கு வருகை புரிந்த பிரதமர், பின்னர் மேடான் செலேராவில் மக்களோடு அமர்ந்து உணவருந்தினார்.