மும்பை, நவம்பர்-20, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக, அவரின் மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
29 ஆண்டுகால திருமண வாழ்வில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்வு ரீதியான அழுத்தத்தால், ரஹ்மானைப் பிரியும் கடினமான முடிவை சாய்ரா எடுத்துள்ளதாக, அவரின் வழக்கறிஞர் அறிவித்தார்.
ஒருவர் மீது ஒருவர் ஆழமான அன்பை வைத்திருந்தாலும், விரிசலை சரி செய்ய முடியாத அளவுக்கு இடைவெளி ஏற்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான நேரத்தில் தங்களின் தனிப்பட்ட உணர்வுக்கு மக்கள் மதிப்பளிப்பர் என நம்புவதாகவும் சாய்ரா கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில், திருமண பந்தத்தில் 30 ஆண்டுகளை நிறைவுச் செய்யும் ஆசை நிறைவேறாமல் போயிருப்பது பெருத்த இடியே என்றாலும், நடப்பவை குறித்து இனி யோசிப்போம் என தனது X தளப் பதிவில் ரஹ்மான் கூறியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானும்- சாய்ரா பானுவும் 1995-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு கதீஜா, ரஹீமா, அமீன் என்ற மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.