
ஜொகூர், ஜாலான் பத்து பஹாட் – மெர்சிங்கில், இழுவை வாகனத்தை உரசிய மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், கை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நள்ளிரவு மணி 12.20 வாக்கில் நிகழ்ந்த அவ்விபத்தில் 18 வயது முஹமட் ஹாசிக் ஐகால் உயிரிழந்ததை, குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் பஹாரின் முஹமட் நோ உறுதிப்படுத்தினார்.
மெர்சிங்கிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளோட்டி, எதிர்புறத்திலிருந்து வந்த இழுவை வாகனத்தை உரசி விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது.
இழுவை வாகன ஓட்டுனருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. எனினும், கம்பத்து மக்களின் தாக்குதலுக்கு அஞ்சி அவர் வாகனத்தை நிறுத்தாமல் மெர்சிங் நோக்கி செலுத்தியுள்ளார்.
பின்னர், குளுவாங் போக்குவரத்து அமலாக்க புலனாய்வுப் பிரிவுக்கு நேரடியாக வந்து அவர் அவ்விபத்து தொடர்பில் புகார் அளித்ததாக, பஹாரின் சொன்னார்.
சம்பவ இடத்தில், சாலை விளக்கு இன்றி இருள் சூழ்ந்திருந்ததால் அவ்விபத்து நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.