செராஸ், மே 7 – கோவில்களை வழிபாட்டுத் தளமாக மட்டுமல்லாமல் வழிகாட்டும் தளமாகவும் ஆக்குவோம் எனும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது செராஸ் தாமான் 10ஆவது மைல் அருள்மிகு ஸ்ரீ மகா முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம்.
40 ஆண்டுகளுக்கு மேலாக பழமை மிகுந்த அக்கோவில், சுற்றுவட்டார மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பல மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
மாணவர்களுக்காக தேவாரம், கல்வி யாத்திரை, தன்முனைப்பு முகாம்கள் அங்கு நடத்தப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல், ஆலயத்திற்கு வருகை அளிக்கும் பக்தர்களுக்கு ஆன்மீக வளர்ச்சி உட்பட சமூக நல திட்டங்களையும் மேற்கொண்டு வருவதாக அதன் தலைவர் டாக்டர் கனகசுந்தரம் விவரித்தார்.
சுயம்புவாக அம்மன் அவ்வாலயத்தில் தோன்றி மக்களுக்கு அருள் பாலித்து வருவதாக அதன் தலைவர் டாக்டர் கனகசுந்தரம் தெரிவித்தார்.
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் சனிக்கிழமை, அங்கு திருவிழா நடத்தப்படுவது வழக்கமும் என்றார்.
இதனிடையே, சிறிய ஆலயமாகச் செயல்பட்டு வந்த அவ்விடத்தை, முறையாக அரசாங்கத்தின் முழு ஒப்புதலை பெற்று, தற்போது விரிவாக்கம் செய்ய கட்டுமான பணிகள் செய்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
6 மாதங்களுக்கு முன் அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஆரம்பமான கட்டுமான பணி, தற்போது 50 சதவீதம் முழுமையடைந்துள்ள நிலையில்,அதன் திருப்பணிக்கு நன்கொடைகள் வரவேற்கப்படுவதாகக் கூறினார்.
பக்தர்கள் வழங்கவுள்ள நிதி உதவி, இன்னும் கூடுதல் பொலிவுடன் ஆலயத்தை நிர்மாணிக்க கைகொடுக்கும் என அதன் தலைவர் டாக்டர் கனகசுந்தரம் தெரிவித்தார்.
ஆலயத் திருப்பணிக்குப் பின் அவ்வாலயம் சமய வளர்ச்சிக்கும் சமுதாய மறுமலர்ச்சிக்கும் ஒரு தலமாக அமையும் என உறுதியளித்துள்ளார்.
இதனிடையே, ஆலயத் திருப்பணியைத் தொடர்ந்து தடையின்றி மேற்கொள்ளவும், முழுமைப் பெறச்செய்யவும் பக்தர்களாகிய அனைவரும் பங்கேற்று ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என ஆலய நிர்வாக குழுவினர் சார்பாக ஆலயத் தலைவர் டாக்டர் கனகசுந்தரம் கேட்டுக் கொண்டார்.