கோலாலம்பூர், அக்டோபர்-13 – நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக நடைபெறும் இந்தியக் கூட்டுறவுக் கழகங்களுக்கான மாநாட்டில் பங்கேற்ற அனைத்துக் கூட்டுறவுக் கழகங்களும், 30,000 ரிங்கிட் மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதிப் பெற்ற கூட்டுறவுக் கழகங்களுக்கு அவற்றின் தகுதிக்கேற்ப அத்தொகை வழங்கப்படும் என, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
கூட்டுறவுக் கழகங்கள் தத்தம் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்த அவற்றுக்கு உதவும் நோக்கில், அந்த மானியம் வழங்கப்படுகிறது.
தமதைச்சின் மூலம் இந்திய சமூகத்துக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதனை உறுதியாக செய்வேன் எனக் கூறிய ரமணன் அதற்கு இந்திய கூட்டுறவு கழகங்கள் தன்னோடு கைக்கோர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
கோலாலம்பூர் பேங்க் ராக்யாட் இரட்டை கோபுரத்தில் இன்று அம்மாநாட்டினை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் அவ்வாறு சொன்னார்.
கடந்தாண்டு வரைக்குமான தகவலின் படி நாட்டிலிருக்கும் 419 இந்தியக் கூட்டுறவுக் கழகங்களில் இன்றைய ஒரு நாள் மாநாட்டில் பங்கேற்ற சுமார் 200 கழங்கங்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வேளையில் அதே நிகழ்வில் 70 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டில் சுழல் முதலீட்டு நிதியம் (Tabung Modal Pusingan) குறித்த அறிவிப்பும் வெளியானது.
3 மிகச் சிறந்த இந்தியக் கூட்டுறவுக் கழகங்களாக தேர்வு செய்யப்பட்ட தேசியப் பல்நோக்கு கூட்டுறவுக் கழகம், நெகிரி செம்பிலான் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டுறவுக் கழகம், நேசா பல்நோக்குக் கூட்டுறவுக் கழகம் ஆகியவற்றுக்கு அந்நிதிக்கான மாதிரி காசோலைகள் வழங்கப்பட்டன.
200 கூட்டுறவுக் கழகங்கள் சார்பில் 800 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் அரசாங்கக் கொள்கைகள் குறித்தும், கூட்டுறவுக் கழகங்களுக்கான அரசு உதவிகள் குறித்தும் விளக்கமளிப்பு நடைபெற்றது.
முதன்முறையாக நடத்தப்பட்ட இம்மாநாடு இந்தியக் கூட்டுறவுக் கழகங்களை வலுப்படுத்தி இந்தியர்களின் பொருளாதாரத்தை உயர்த்த உதவுமென டத்தோ ஸ்ரீ ரமணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.