Latestமலேசியா

முதலில் இங்குள்ள கள்ளக்குடியேறிகளைத் திருப்பியனுப்புங்கள்; பிறகு அந்நிய தொழிலாளர்களைத் தருவிக்கலாம்

ஷா ஆலாம், ஆகஸ்ட் 8 – அந்நிய தொழிலாளர்களை இந்நாட்டுக்குள் கொண்டு வரும் முன்னர், இங்குள்ள கள்ளக்குடியேறிகளை முதலில் அவரவர் நாடுகளுக்குத் திரும்பியனுப்ப வேண்டும். மேலவை உறுப்பினர் டத்தோ அர்மான் அஸா அபு அனிஃபா (Datuk Arman Azha Abu Hanifah) அரசாங்கத்திடம் அவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இங்குள்ள கள்ளக்குடியேறிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகக் கூறிய அவர், இதை அப்படியே விட்டு விட்டால் இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் மற்றும் மற்ற இனத்தவர்களை விட, கள்ளக்குடியேறிகளின் எண்ணிக்கை அதிகமாகி விடும் என அச்சம் தெரிவித்தார்.

கூடிய விரைவில் அரசாங்கம் வங்காளதேச தொழிலாளர்களை இந்நாட்டுக்குத் தருவிக்கவிருக்கிறது. ஆனால் இங்கு ஏற்கனவே இருக்கும் கள்ளக்குடியேறிகளைத் தத்தம் சொந்த நாடுகளுக்குத் திருப்பியனுப்ப உள்துறை அமைச்சரும், மனித வள அமைச்சரும் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என டத்தோ அர்மான் கேள்வி எழுப்பினார்.

அவர்களை இங்கேயே விட்டு வைத்தால் அடுத்த 10-15 ஆண்டுகளில் பல்வேறு பிரச்னைகள் உருவாகக்கூடும். கள்ளக் குடியேறிகள், இந்நாட்டில் கடைகளைத் திறந்து வியாபாரம் நடத்துவதையும் நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். வட்டார மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களின் ஆதிக்கம் பெருகி விட்டது என்றும் டத்தோ அர்மான் சொன்னார்.

இவ்விஷயத்தில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!