கோலாலம்பூர், மே 3 – ஏழு மாநிலங்களில் 11 மில்லியன் ரிங்கிட்டிற்கு கூடுதலான தொகை சம்பந்தப்பட்ட போலி Goldman Sachs முதலீட்டு மோசடி தொடர்பில் 12 தனிப்பட்ட நபர்களை திங்கட்கிழமையன்று போலீசார் கைது செய்தனர். 21 முதல் 45 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழிகள் சிலாங்கூர், ஜோகூர் , நெகிரி செம்பிலான் , சரவா, பேரா, கெடா மற்றும் பினாங்கில் மேற்கொள்ளப்பட்ட OPS Nuri திட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாக வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறையின் இயக்குனர் Ramli Mohamad தெரிவித்தார். அந்த சந்தேகப் பேர்வழிகள் அனைவரும் நிறுவனத்தின் இயக்குநர்களாக செயல்பட்டதோடு நிறுவனங்களின் உரிமையாளர்களாகவும் இருந்துள்ளனர். முதலீட்டில் ஏமாற்றுவதற்காக அவர்கள் மற்றவர்களின் பெயரில் வங்கிக் கணக்கை பயன்படுத்தி வந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் இணையம் வாயிலாக செயல்பட்ட அந்த மோசடிக் கும்பல் உலகின் பிரபலமான முதலீட்டு நிறுவனமான Goldman Sachs பெயரை பயன்படுத்தி மக்களை நம்பவைத்துள்ளனர் என இன்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் Ramli தெரிவித்தார். முகநூல், WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களை மோசடிக்கான சந்தை உத்திகளாக அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்திட்டத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 15 முதல் 200 விழுக்காடுவரை ஆதாயம் கிடைக்கும் எனக்கூறி அவர்கள் மக்களை நம்பவைத்து ஏமாற்றியுள்ளனர் என Ramli Mohamad கூறினார்.