கோலாலம்பூர், ஆகஸ்ட் 28 – ஒரு குறிப்பிட்ட வங்கியின் பெயரைப் பயன்படுத்தி, இல்லாத முதலீடு திட்டம் இருப்பதாகக் கூறி, 85 வயது மூதாட்டி ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார்.
வங்கி சேமிப்பு முதலீட்டில், நிலையாக ஆண்டுக்கு 4.8 சதவீதம் ஈவுத்தொகை வழங்குவதாக, வங்கி அதிகாரி என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மோசடிக்காரன் ஒருவன் அம்மூதாட்டியை அழைத்துள்ளான்.
அதனை நம்பி, அந்த மூதாட்டியும் மொத்தம் 1,372,886.45 ரொக்கத்தை சொந்த பெயரில் உள்ள இரண்டு கணக்குகளுக்குப் மாற்றியுள்ளார்.
பின், இரண்டு வங்கிக் கணக்குகளுக்குமான இணைய வங்கி விவரங்களை தருமாறும் அறிவுறுத்தியிருக்கிறான்.
அதன் பின்னர், தனது வங்கி கணக்கில் காணாமல் போன பணத்தைக் கண்டறிந்த பிறகே தான் ஏமாற்றப்பட்டத்தை அந்த மூதாட்டி உணர்ந்திருக்கிறார்.
இந்த வழக்கின் விசாரணை தற்போது குற்றவியல் சட்டம் பிரிவு 420-யின்படி நடைபெற்று வருவதாக வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரி ராம்லி முகமட் யூசுப் (Datuk Seri Ramli Mohamed Yoosuf) கூறினார்.