
அலோர்காஜா, செப் 11 – அலோர் காஜாவுக்கு அருகே கோலா சுங்கை பாரு மீனவர்கள் தரையிறங்கும் பகுதியில் ஐந்து பெரிய முதலைகள் உட்பட பல்வேறு முதலைகள் நடமாட்டத்தினால் மீனவர்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆற்றில் நீர் மட்டம் குறையும்போது அந்த முதலைகள் நடமாட்டம் அதிகரிப்பதால படகுகளை கழுவுவது மற்றும் படகின் கற்றாடியில் மாட்டிக்கொண்டிருக்கும் குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுபடும் துணிச்சல் இல்லாமல் இருப்பதாக அந்த மீனவர்கள் தெரிவித்தனர்.
அண்மையில் கோலா சுங்கை பாருவிற்கு அருகே லுபுக் சீனாவில் இறால் பிடித்துக் கொண்டிருந்த வயதான பெண்மணி ஒருவரை முதலை தாக்கிய சம்பவத்தினால் தாங்கள் மேலும் அச்சத்திற்கு உள்ளாகியிருப்பதாக ஷாமின் ருசாலி என்ற 33 வயது மீனவர் ஒருவர் தெரிவித்தார். கடந்த மாதம் தமது படகைக் கழுவிக்கொண்டிருந்தபோது பெரிய அளவிலான இரண்டு முதலையைத் தாம் கண்டது முதல் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பதாக அவர் கூறினார். முதலைகள் நடமாட்டம் குறித்து கோலாலிங்கி சட்டமன்ற உறுப்பினர் ரோஸ்லி அப்துல்லா மற்றும் வனவிலாங்கு பூங்கா துறையிடம் புகார் செய்திருப்பதாக அவர் கூறினார்.