ஜித்தா ( Jeddah), பிப் 2 – சவூதி அரேபியாவில் முதல் முறையாக நடைபெற்ற யோகா விழாவில் , 1,000 -கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
மன்னர் அப்துல்லாவின் பொருளாதார நகரில் உள்ள ஜுமான் பூங்காவில் நடைபெற்ற அந்த யோகா விழாவை, அந்நாட்டு யோகா மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. அந்த மன்றம், யோகாவை சவூதி அரேபியாவில் ஊக்குவிப்பதற்காக 2021-ஆம் ஆண்டில் சவூதி ஒலிம்பிக் மன்றம் மற்றும் விளையாட்டு அமைச்சால் நிறுவப்பட்ட ஓர் அரசு அமைப்பாகும்.
10 வயதிலிருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்கள் அந்த யோகா விழாவில் பங்கேற்று , அடிப்படை யோகா கலையை தெரிந்து கொண்டதோடு, யோகா மையங்கள் வழங்கும் சேவையையும் அறிந்து கொண்டனர்.
இவ்வேளையில் முதல் முறையாக நடைபெற்ற அந்த விழாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை எண்ணி மகிழ்சி அடைவதாக, சவூதி அரேபியா யோகா மன்றத்தின் தலைவர் பத்மஶ்ரீ விருது பெற்றவரான நௌஃப் பின்ட் முஹம்மது அல்-மரூயி தெரிவித்தார்.
சவூதி மக்கள் யோகா கலையை மற்றுமல்ல யோகா மீதுள்ள தங்களின் எண்ணங்களையும் தழுவிக் கொண்டுள்ளனர் என்பதற்கு , அந்த விழா சான்றாக அமைவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, ஆரோக்கியத்தைப் பேணவும், பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் நோய்களைத் தடுப்பதற்கும் யோகா , பரவலாக கடைப்பிடிக்கப்படும் ஒரு சிகிச்சையாகவே தற்போது மாறிவிட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.