கோலாலம்பூர், நவம்பர் 11 – மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவை ஆண்டுதோறும் நடத்தும் முனைவர் இரா. தண்டாயுதம் சுழற்கிண்ணச் சொற்போர் போட்டி, இவ்வாண்டும் 23ஆவது முறையாக நடைபெறவுள்ளது.
தித்திக்கும் செந்தமிழ் இளையோரிடத்தில் திணிப்பதற்கல்ல; அவர்களின் அறிவுப் பசியைத் தணிப்பது என்பதை மெய்ப்பித்து வரும் இந்தச் சொற்போர் போட்டி, மீண்டும் நான்கு ஆண்டுகளுக்குப் பின் நேர்முகமாக நடைபெறவிற்பதாக அதன் தலைவர் டிலாஷினி (Dhilasini) தெரிவித்தார்.
எதிர்வரும் 23ஆம் திகதி நவம்பர், சனிக்கிழமை இப்போட்டி மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருப்பதாக அவர் கூறினார்.
இதற்கான பதிவு காலமும் தற்போது நவம்பர் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
18 வயது முதல் 30 வயதிலான இளையோர், ஒரு குழுவில் நால்வராக இப்போட்டியில் பங்கெடுக்க முடியும் என்கிறார் அதன் துணைத்தலைவர் ஜீவகுகன் (Jeevakugan).
இச்சொற்போருக்கான விவரங்கள் தமிழ்ப் பேரவை, மலாயாப் பல்கலைக்கழகத்தின் படவரியில் அறிந்து கொள்ளலாம்.
அதேவேளையில், இப்போட்டிக்காக ஏற்பாட்டுக் குழுவினர் நிதி உதவி தேடி வரும் நிலையில், விருப்பமுடையவர்கள் திரையில் காணும் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு உதவலாம்.