கோலாலம்பூர், பிப் 27 – முன்னாள் ஒலிம்பிக் போட்டியாளரும் நாட்டின் நடுத்தர தூர ஒட்டப்பந்தய வீரருமான ஆர். சுப்ரமணியம் இன்று தமது 83- வது வயதில் காலமானார்.
நெஞ்சு வலியின் காரணமாக இன்று மதியம் மணி 2-க்கு காஜாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தனது தந்தை அடுத்த ஒரு மணி நேரத்தில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக, சுப்ரமணியத்தின் மகள் சுபத்ரா தெரிவித்தார்.
சுப்ரமணியம் சிலாங்கூர், பூச்சோங்கிலுள்ள ஒரு தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் தமது பணியிலும் சிறந்து விளங்கினார். நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றிருந்த இவர் சிறைச்சாலை இயக்குநராக ஓய்வு பெற்றார்.
60 , 70- களில் ஓட்டப் பந்தய விளையாட்டில் நாட்டு மக்களிடையே நன்கு அறிமுகமானவராக விளங்கிய சுப்ரமணியம் 1964 ஆம் ஆண்டு தொக்யோ ஒலிம்பிக்கிற்கும் 1968- ஆம் ஆண்டு மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்றிருந்தார்.
தடகளப் போட்டிகளில் தமது 10 ஆண்டுகால பங்கேற்பில் இவர் ஆசிய , SEAP தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் வாயிலாக 7 தங்கப் பதக்கங்களையும் 6 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.