
கோலாலம்பூர், செப் 8 – நெகிரி செம்பிலான் முன்னாள் துங்கு அம்புவான் பெசாரும் முன்னாள் பேரரசியுமான துங்கு நஜிஹா துங்கு பெசார் புர்ஹானுட்டின் இன்று காலை மணி 6.53 மணியளவில் கோலாலம்பூர் சென்ட்ரல் கார்டியக் வாஸ்குலர் மருத்துவமனையில் காலமானார். 1994 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டுவரை நாட்டின் 10 ஆவது பேரரசராக துவாங்கு ஜாபார் துவாங்கு அப்துல் ரஹ்மான் பணியாற்றிய காலத்தில் துவாங்கு நஜிஹா பேரரசியாக பணிபுரிந்துள்ளார். செப்டம்பர் 1 ஆம் தேதி தமது 100 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய அடுத்த சில நாட்களில் துங்கு அம்புவான் நஜிஹா மரணம் அடைந்தார். அஸார் தொழுகைக்குப் பின் துவாங்கு நஜிஹாவின் நல்லுடல் செரி மெனாந்தி அரச மையத்துக் கொல்லையில் அடக்கம் செய்யப்படும் என நெகிரி செம்பிலான் மாநில அரசாங்க செயலாளர் முகமது சாபிர் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று முதல் ஒரு வாரத்திற்கு துக்கம் அனுசரிக்கப்படும் என என்றும் அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் யாங் டி பெர்துவான் பெசார் துவாங்கு ஜாபார் துவாங்கு அப்துல் ரஹ்மானைத் திருமணம் புரிந்ததைத் தொடர்ந்து 1967 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2008ஆம் ஆண்டுவரை நெகிரி செம்பிலான் துங்கு அம்புவான் பெசாராக துவாங்கு நஜிஹா இருந்தார். அவர் துவாங்கு ஜாபாரை 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி திருமணம் புரிந்தார். அந்த தம்பதியருக்கு மூன்று மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர். துவாங்கு ஜாபார் 2008 ஆம் ஆண்டு தமது 86 ஆவது வயதில் காலமானார்.