மும்பையைத் துரத்தும் ‘வழுக்கைத் தலை வைரஸ்’ ; பீதியில் கிராம மக்கள்

மும்பை, ஜனவரி-16, இந்தியா மும்பையில் உள்ள சில கிராமங்களில் ‘வழுக்கைத் தலை வைரஸ்’ எனும் மர்ம நிகழ்வால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்த 3 நாட்களில் மட்டும் 3 கிராமங்களில் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு தலைமுடி மோசமாக உதிர்ந்து, வழுக்கைத் தலையாகி விட்டதாகக் கூறப்படுகிறது.
அவர்களில் பலருக்கு, தலையில் அரிப்பு ஏற்பட்டு பின்னர் முடி கொட்டத் தொடங்கியது.
மோசமாக முடி உதிர்ந்ததால், வெளியில் ‘தலைக் காட்ட’ முடியாமல் சங்கோஜப்பட்டு பலர் தலையை மொட்டையடித்துக் கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் தலையில் உள்ள தோல், முடி, நகங்கள் ஆகியவற்றின் மாதிரிகள் ஆய்வுக் கூட சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், இந்த ‘வழுக்கைத் தலை வைரஸ்’ பரவல் பூஞ்சைத் தொற்றாக இருக்க வாய்ப்பில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், உண்மைக் காரணத்தைக் கண்டறிய மேற்கொண்டு நுண்ணுயிரியல் சோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், ICMR எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தைச் சேர்ந்த நிபுணர்கள் குழு பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நீர் ஆதாரங்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அம்சங்கள் எதுவும் காரணமாக இருக்கலாமா என்ற கோணத்திலும் உள்ளூர் அதிகாரத் தரப்புகள் விசாரித்து வருகின்றன.