ஜோகூர் பாரு, பிப் 28 – கோவிட் தொற்று காலத்தில் ஒருவருடன் கைகுலுக்கும் நடைமுறை தவிர்க்கப்பட்டிருக்கும் நிலையில் சிலர் ‘fist bump’ எனப்படும் கை முஷ்டியால் முட்டிக் கொண்டு நலன் விசாரிப்பதைப் பார்த்திருப்போம்.
இந்நிலையில் அவ்வாறு தனது ஆதரவாளருடன் ‘fist bump’ செய்த , ஜோகூர் மாநில தேர்தல் வேட்பாளருக்கு , 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. SOP நடைமுறையை மீறியதற்காக மூடா கட்சியைச் சேர்ந்த புக்கிட் பெர்மாய் ( Bukit Permai ) தொகுதி வேட்பாளருக்கே அந்த அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே, கை தொடுதல் மூலமாக தூர இடைவெளியைக் கடைப்பிடிக்கத் தவறியதை காரணமாகக் காட்டி விதிக்கப்பட்ட அந்த அபராதம் குறித்து, மூடா கட்சி இன்று ஓர் அறிக்கையின் மூலமாக ஆட்சேபத்தை தெரிவித்துள்ளது.
இதர கட்சிகளின் அரசியல்வாதிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் அதிளவில் கூட்டத்தைக் காண முடிந்துள்ளது. SOP மீறல்களும் நிகழ்ந்துள்ளன. அவ்விவகாரத்திலும் கவனம் செலுத்தும்படியும், அபராதம் விதிப்பதில் அரசாங்கம் நடுநிலையாக நடந்துக் கொள்ளும்படியும் மூடா கட்சி கேட்டுக் கொண்டது.