
கோலாலம்பூர், ஆக 20 – முஸ்லீம் அல்லாதாரின் நலன்களை தமது அரசாங்கம் தொடர்ந்து உறுதிப்படுத்தும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். கிறிஸ்துவர்கள், இந்துக்கள் அல்லது பௌத்தர்கள் உட்பட முஸ்லீம் அல்லாத அனைவரின் உரிமைகளையும் அரசாங்கம் உறுதிப்படுத்தும் என அவர் கூறினார். இதர மலேசியர்களுக்கு விளக்குவதற்காக முஸ்லீம்கள் இஸ்லாமிய சமயம் குறித்து சிறந்த புரிந்துணர்வை கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பல்வேறு சமயங்கள் மற்றும இனங்களைக் கொண்ட நாட்டில் திருக்குர்ஆனை சிறந்த முறையில் புரிந்துகொண்டு இஸ்லாத்தை மற்றவர்களுக்கு விளக்கம் அளிப்பதற்கு முஸ்லீம்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நேற்று கோலாலம்பூரில் அனைத்துலக திருக்குர்ஆன் ஓதும் நிகழ்வை தொடக்கிவைத்தபோது அவர் இந்த அறைகூவலை விடுத்தார். இதனிடையே சிறந்த சமய புரிந்துணர்வை உறுதிப்படுத்துவற்கு இஸ்லாம் மீதான வெறுப்புணர்வுக்கு எதிராக போராடுவதற்கு போதுமான நிதி உத்தரவாதத்தை கூட்டரசு அரசாங்கம் கொண்டுள்ளது என்றும் அன்வார் கூறினார்.