
கோலாலம்பூர், ஏப் 22 – நாட்டில் சகோதரத்துவமும் ஒற்றுமையும் , நல்லெண்ணமும் தொடர்ந்து வலுவடைவதற்கு முஸ்லிம் சகோதர்களுன் ஒன்று சேர்ந்து நோன்பு பெருநாளை கொண்டாடுவோம் என ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டார். புனிதமான ரம்லான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருந்து, பசியை உணர்ந்து, இறைசக்தியையும் பூரணமாக அனுபவித்து, நோன்புப் பெருநாளைக் கொண்டாடி மகிழும் முஸ்லீம் நண்பர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தமது நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை விக்னேஸ்வரன் தெரிவித்துக் கொண்டார்.
‘இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி’ என்ற முழக்கத்துடன், தமிழ் மொழி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட எண்ணற்ற முஸ்லீம் அன்பர்களை நாம் கண்டிருக்கிறோம். அரசியலிலும் மஇகாவின் வழி, பல இந்திய முஸ்லீம் நண்பர்கள் நம்முடன் இணைந்து அரசியல் பயணம் மேற்கொண்டு நமது இந்திய சமுதாய நலன்களுக்காக இணைந்து போராடியிருக்கிறார்கள். மலேசியாவில், இந்திய சமுதாயத்தில் நிலவும் இந்து, முஸ்லீம் ஒற்றுமை என்றென்றும் நீடிக்க வேண்டும், நம்மை ஒன்றிணைக்கும் தமிழ் மொழியும் எந்நாளும் நிலைத்து நிற்க வேண்டும் என்ற சிந்தனைகளுடன் நோன்பு பெருநாளை கொண்டாடுவோம் என விக்னேஸ்வரன் வெளியிட்ட நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.