Latestமலேசியா

முஸ்லீம் அல்லாதாரின் உணவகத்தில் இருந்து எடுத்து வந்த கோழிச் சோற்றை விற்றனரா? விசாரணைக்கு உத்தரவு

ஜோர்ஜ் டவுன், ஆகஸ்ட் 16 – ஜோர்ஜ் டவுன், சுங்கை ஆரா (Sungai Ara)வில் மலாய்க்காரருக்குச் சொந்தமான சிக்கன் ரைஸ் (chicken rice) கடைக்கு உணவுகள் முஸ்லீம் அல்லாதாரின் உணவகத்தில் இருந்து எடுத்து வரப்படுவதாகக் கூறப்படுவது தொடர்பில் பினாங்கு மாநில அரசாங்கமும் மாநில இஸ்லாமிய சமய விவகாரத் துறையும் இதுவரை அதிகாரப்பூர்வ புகார் எதையும் பெறவில்லை.

எனவே இதன் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக யாரும் இதுவரை அழைக்கப்படவில்லை என பினாங்கு மாநில துணை முதலமைச்சர் டத்தோ அகமட் ஸாக்கியுடின் அப்துல் ரஹமான் (Datuk Ahmad Zakiyuddin Abdul Rahman) தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள கடை உரிமையாளர், தொழிலாளர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு விட்டனர். ஆயினும் அவர்கள் யாருமே இன்னும் விசாரணைக்காக அழைக்கப்படவில்லை.

எனினும் மலாய்க்காரர்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விவகாரமாக இருப்பதால் இதனைத் தமது தரப்பு சற்று கடுமையாகக் கருதுவதாகக் கூறிய டத்தோ அகமட் ஸாக்கியுடின், இதன் தொடர்பில் முழுமையான விசாரணையை மேற்கொள்ளும்படி தாம் பினாங்கு இஸ்லாமிய சமய விவகாரத் துறை உட்பட மேலும் சில தரப்பினருக்கு உத்தரவிட்டிருப்பதாகச் சொன்னார்.

சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் வைரலாகியிருக்கும் 2 நிமிடம் 38 வினாடிகள் கொண்ட வீடியோவில், தங்கள் கடையில் விற்பதற்காக, இரு மலாய் ஆடவர்கள் பாயா தெருபோங் (Paya Terubong)கிலுள்ள முஸ்லீம் அல்லாதாரின் உணவகத்தில் இருந்து கோழிச் சோற்றை எடுத்துக் கொண்டு போகும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது முஸ்லீம் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!