கோலாலம்பூர், நவம்பர்-18 – முஸ்லீம் அல்லாதோரின் கவலைகளைப் போக்கும் வரையில் மத்தியில் பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவது கடினமே.
மலேசிய உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் Dr பி.ராமசாமி அதனை நினைவுறுத்தியுள்ளார்.
இந்நாட்டில் தங்களின் அடிப்படை உரிமைக் குறித்து மலாய்க்காரர் அல்லாதோர் அல்லது முஸ்லீம் அல்லாதோர் மத்தியில் பெருத்த கவலை நிலவுவது யாருக்கும் தெரியாததல்ல.
அதனைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டே PH தலைமையிலான அரசாங்கம் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதோடு, அதனை நீட்டிக்கவும் செய்கிறது.
முஸ்லீம் அல்லாதோரின் எதிரியாக PAS கட்சியை முன்னிறுத்தியே DAP அரசியல் செய்கிறது.
மற்றபடி முஸ்லீம் அல்லாதோரின் உற்றத் தோழனாக விளங்கும் அளவுக்கு நடப்பு அரசாங்கம் ஒன்றும் செய்திடவில்லை.
விரைவில் நாடாளுமன்றத்தில் இரண்டாம், மூன்றாம் வாசிப்புக்கு விடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் முஃப்தி சட்ட மசோதா, இந்த அரசாங்கத்தின் எண்ணத்தை வெளிச்சம் போட்டு காட்டி விடும்.
அச்சட்ட மசோதா முஸ்லீம் அல்லாதோருக்கு மறைமுக விளைவுகளைக் கொண்டு வரலாம்.
இது போன்ற சூழ்நிலையில், முஸ்லீம் அல்லாதோர் மத்தியில் கவலையைப் போக்கி அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் பணியை எதிர்கட்சி மும்னெடுக்க வேண்டும்.
சீனர்கள் தயங்கினாலும், இந்தியர்கள் மெல்ல PN பக்கம் நகருவதைக் காண முடிகிறது.
எனவே, மலாய்க்காரர் அல்லாதோர் பெரிக்காத்தானுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றில்லை; ஆனால் அவர்களுக்கு தேவைப்படுவது நம்பிக்கை.
அந்த நம்பிக்கையை விதைத்து, அவர்களின் குரலாக ஒலித்து புத்ராஜெயாவை நோக்கி நகருவதா அல்லது பழைமைவாத மலாய் சிந்தாந்தத்திலேயே ஊறி சொந்த கோல் போடுவதா என்பதை இனி பெரிக்காத்தான் தான் முடிவு செய்ய வேண்டுமென, Dr ராமசாமி முகநூலில் பதிவிட்டுள்ளார்.