Latestமலேசியா

முஹிடின் பேச்சால் கடும் சினமடைந்த பஹாங் பட்டத்து இளவரசர்; கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்து

குவாந்தான், ஆகஸ்ட்-19, நாட்டின் பத்தாவது பிரதமர் நியமனத்தில் அப்போதைய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லாவின் முடிவை கேலி செய்யும் வகையில் பேசியுள்ள தான் ஸ்ரீ முஹிடின் யாசின் மீது, பஹாங் பட்டத்து இளவரசர் கடும் சினமடைந்துள்ளார்.

16-வது மாமன்னரைச் சிறுமைப்படுத்தும் வகையில் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பேசியிருப்பது, 3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்களை உட்படுத்திய நிந்தனைச் செயலின் கீழ் வருகிறது.

எனவே, அவர் மீது எந்த கரிசனமும் காட்டாமல் அரச மலேசியப் போலீஸ் படை கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென, தெங்கு ஹசானால் இப்ராஹிம் அலாம் ஷா ( Tengku Hassanal Ibrahim Alam Shah) அறிக்கையொன்றில் வலியுறுத்தினார்.

பத்தாவது பிரதமரைத் தேர்ந்தெடுத்த விஷயத்தில் அல் சுல்தான் அப்துல்லா நியாயமாக நடந்துக் கொள்ளவில்லை என்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் முஹிடின் பேசியுள்ளார்.

அவரின் அப்பேச்சு, மிகவும் ஆபத்தானது; மலாய் ஆட்சியாளர்கள் மீது மக்கள் மத்தியில் சினத்தை ஏற்படுத்தி அவர்களை அரண்மனைக்கு எதிராக திருப்பும் தீய நோக்கத்தைக் கொண்டது.

மூத்த அரசியல்வாதியான முஹிடின் கூறிய வார்த்தைகள், ஒரு முன்னாள் பிரதமருக்கு அழகல்ல; அரைவேக்காட்டுத்தனமானது என தெங்கு ஹசானால் கடுமையாகச் சாடினார்.

தம்மால் மீண்டும் பிரதமராக முடியாமல் போன ஏமாற்றத்தை அவரால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை என்பதையே அச்செயல் காட்டுகிறது.

அரசியலமைப்பு வல்லுநர்கள், மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் உள்ளிட்ட தரப்புகளின் ஆலோசனைகளைப் பெற்ற பிறகே பத்தாவது பிரதமரின் நியமனத்தில் அல் சுல்தான் அப்துல்லா முடிவெடுத்ததை, அவரின் புதல்வருமான தெங்கு ஹசானால் சுட்டிக் காட்டினார்.

கிளந்தான் நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முஹிடின் பேசியது தொடர்பில், அவர் மீது இது வரை 29 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

நாளை அவர் போலீசிடம் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!