
கோலாலம்பூர், செப்டம்பர் 12 – ஜாலான் சென்ட்ரலிலுள்ள, MIDA – மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டடம் இன்று காலை ஊடகவியலாளர்களின் கவனத்தை பெற்றது.
பூலை நாடாளுமன்றம் மற்றும் சிம்பாங் ஜெராம் இடைத்தேர்தல் பரப்புரையின் போது பெரிகாத்தான் நேஷனல் தலைவர் டான் ஸ்ரீ முஹிடின் யாசிந் நிகழ்த்திய உரை தொடர்பில், போலீஸ் வாக்குமூலம் பதிவுச் செய்யப்போவதாக வெளியான தகவலை தொடர்ந்து, அங்கு இருபதுக்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் திரண்டிருந்தனர்.
எனினும், செய்தி சேகரிக்கவோ, கட்டடத்தின் புகைப்படங்களை எடுக்கவோ அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக, காலை மணி 9.28 வாக்கில், வெல்பயர் (Vallfire) வாகனம் வாயிலாக, டான் ஸ்ரீ முஹிடின் யாசின் MIDA வளாகத்திற்கு நுழைந்ததை காண முடிந்தது.
வாக்குமூலம் பதிவுச் செய்ய, முஹிடின், செப்டம்பர் 12-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை அழைக்கப்படுவார் என, நேற்று தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஆயுப் கான் மைடின் பிச்சை கூறியிருந்தார்.
பத்வா மற்றும் மலாய்க்காரர்கள் அதிகாரத்தை இழப்பார்கள் என கூறியிருந்த டான் ஸ்ரீ முஹிடினுக்கு எதிராக, இரு விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.