மூவார், மே 7 – நெடுஞ்சாலையில் வாகனத்தை நிறுத்தி தகராறில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்வார்கள்.
1987-ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ், விசாரணைக்கு உதவும் பொருட்டு அவர்கள் கைதுச் செய்யப்படுவார்கள் என, மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அஜிஸ் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.
நெடுஞ்சாலையில் இரு ஆடவர்கள் தகராறில் ஈடுபடும் 46 வினாடி காணொளி ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலானதை, மூவார் போக்குவரத்து குற்றப்புலனாய்வுத் துறை அடையாளம் கண்டுள்ளதையும் ரைஸ் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, நெடுஞ்சாலையில் திடீரென தனது வாகனத்தை நிறுத்திய நபர் ஒருவரின் செயலால் ஏற்பட்ட அதிருப்தியால் அந்த சண்டை மூண்டது தெரிய வந்துள்ளது.
மூவாருக்கு அருகில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், வட மாநிலங்களை நோக்கிச் செல்லும் வழியில், 134-வது கிலோமீட்டரில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
அந்த சண்டையில் ஈடுபட்ட 26 மற்றும் 32 வயதான இரு வாகனமோட்டிகளும், அது தொடர்பில் போலீஸ் புகார் செய்துள்ளதையும் ரைஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க, வாகனம் ஓட்டும்போது கைபேசிகளை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், சாலையில் செல்லும்போது சகிப்புத்தன்மையை கடைபிடிக்குமாறும் ரைஸ் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.