மெக்சிகோ, அக்டோபர்-8 – லத்தின் அமெரிக்க நாடான மெக்சிகோவில் பதவியேற்ற ஆறே நாட்களில் நகர மேயர் ஒருவர் கழுத்துத் துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
காருக்குள் வைத்து ஆலெஹாண்ட்ரோ ஆர்கோஸ் (Alejandro Arcos) எனும் அந்நபரின் துண்டிக்கப்பட்ட தலை, காரின் கூரையின் மீது தனியாகப் போடப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து உடனடி விசாரணைக்கு உத்தரவிட்ட மெக்சிகோ அதிபர் கிளாவ்டியோ ஷெய்ன்பௌம் பார்டோ (Claudia Sheinbaum Pardo) கொலையாளி நிச்சயம் நீதியின் முன் நிறுத்தப்படுவான் என சூளுரைத்தார்.
லத்தின் அமெரிக்க நாடுகளில் குறிப்பாக மெக்சிகோவில் அரசியல்வாதிகள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
மெக்சிகோவில் ஜூன் மாதம் மேயர் தேர்தல்களுக்கு முன்பாக 6 வேட்பாளர்கள் கொல்லப்பட்டனர்.
போதைப்பொருள் கடத்தல், ஆள்கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச்செயல்களுக்கு பெயர் பெற்ற அந்நாட்டில், குற்றச் செயல் கும்பல்கள் அடிக்கடி மோதிக் கொள்வதும், பல வேளைகளில் அரசியல்வாதிகள் அதற்கு பலிகடாவாவதும் வாடிக்கையாகும்.