மெர்சிங், செப்டம்பர் 26 – இன்று Felda Tenggaroh-வில் உள்ள ஒரு பள்ளிக்கு அருகில் யானையை விரட்ட முற்பட்ட தோட்டத் தொழிலாளிகளில் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி பலியானார்; மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.
காலை 11 மணியளவில், தேசிய வகை LKTP Tenggaroh பள்ளிக்கு அருகில் அந்த யானையைப் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, பள்ளியின் பாதுகாப்பு கருதி யானையை மீண்டும் அருகிலுள்ள காட்டுக்குள் விரட்ட முயன்றுள்ளனர்.
இருப்பினும், இந்த நடவடிக்கை துரதிர்ஷ்டவசமாக, திசை மாறி தாக்குதலுக்கு வித்திட்டதாக ஜோகூர் பாரு காவல்துறைத் தலைவர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
இந்த தாக்குதலில், யானை கலவரமடைந்து அவர்களை மிதித்ததாகவும் நம்பப்படுகிறது.
இந்நிலையில், 40 வயது மதிக்கதக்க இருவரில் ஒருவர் கழுத்து மற்றும் மார்பில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் தலையில் காயங்கள், உட்புற இரத்தபோக்கு மற்றும் இடுப்பு எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பதாக அவர் கூறினார்.