
கோலாலம்பூர், நவம்பர் 21 – கிளந்தான் பாஸ் தனது அதிகாரப்பூர்வ கார்களாக மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benzes) கார்களை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென, கம்பார் DAP நாடாளுமன்ற உறுப்பினர் சோங் ஜெமின் கூறியுள்ளார்.
மெர்சிடிஸ் கார்களை தயாரிக்கும் நிறுவனம், இஸ்ரேலிலுள்ள, யுனைடெட் ஹட்சாலா மற்றும் ஜெர்மன் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு ஏற்கனவே பத்து லட்சம் யூரோ அல்லது 50 லட்சம் ரிங்கிட்டை நன்கொடையாக வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டி சோங் அவ்வாறு சொன்னார்.
இஸ்ரேலுடன் தொடர்புடைய பொருட்கள் அல்லது தயாரிப்புகளை புறக்கணிப்பதில், விருப்பு வெறுப்பு அல்லது இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது. அதனால், நீங்கள் நான்கு மெர்சிடிஸ் கார்களை பயன்படுத்துவதை நிறுத்த போகிறீர்களா இல்லையா? என சோங் கேள்வி எழுப்பியுள்ளார்.
“நீங்கள் ஸ்டார்பக்ஸ் காபி குடிப்பதில்லை, மெக்டொனால்டில் சாப்பிடுவதில்லை என்பதால், மெர்சிடிஸ் கார்களை பயன்படுத்துவதையும் நிறுத்துங்கள்” என சோங் குறிப்பிட்டார்.
முன்னதாக, சைபர்ஜெயாவில் நடைபெற்ற பாலஸ்தீன உதவி நிகழ்ச்சியில், இஸ்ரேல் தயாரிப்புகளை தொடர்ந்து புறக்கணிக்குமாறு, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மஹாதீர் முஹமட் மலேசியர்களை வலியுறுத்தியிருந்தார்.
எனினும், அந்த புறகணிப்பு அத்தகைய நிறுவனங்களின் உள்ளூர் ஊழியர்கள் மற்றும் ரைடர்கள் மத்தியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில், வருமானம் பாதிக்கப்பட்டதால், மெக்டொனால் நிறுவனம், அதன் பகுதிநேர பணியாளர்களையும், ரைடர்களையும் பணி நீக்கம் செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.