
அண்மையில், தலைநரிலுள்ள மெர்டேக்கா 118 வானுயர் கோபுரத்தில் அத்துமீறி ஏறி சர்ச்சையை ஏற்படுத்திய ரஷ்ய பெண் ட்விட்டர் பதிவு வாயிலாக தமது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். யாரும் அறியாமல் எவ்வாறு அந்த கோபுரத்தில் ஏறியது உட்பட தமது முழு பயணம் குறித்தும் Angela Nikolau எனும் அப்பெண் அந்த பதிவில் விளக்கியுள்ளார். அதோடு, ஏழு வினாடி காணொளி ஒன்றும், சில புகைப்படங்களும் அந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.
மெர்டேக்கா 188 கோபுரத்தை முதல் முறையாக பார்த்த போதே ஈர்க்கப்பட்டதாக கூறிய Angela, அக்கோபுரத்தை முழுமையாக கண்காணிக்கவும், ஆராயவும், அதன் எதிர்புறத்திலுள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறியதாக பதிவிட்டுள்ளார். நகரின் மையப் பகுதியில் கம்பீரமாக வீற்றிருக்கும் அந்த கோபுரம் குறித்த தவல்களை திரட்ட சில வாரங்கள் ஆனதாகவும் Angela குறிப்பிட்டுள்ளார். யாரும் அடையாளம் கண்டுவிடாமல் இருக்க, சம்பந்தப்பட்ட கட்டடத்தின் பணியாளரை போல உடை அணிந்து கொண்டு, முதலில் கட்டடத்தின் 32-வது மாடி வரையில் அவர் சென்றுள்ளார்.
எனினும், அதீத வெப்பம் மற்றும் பணியாளர்களின் வருகையால், அவர் அங்குள்ள காண்கிரீட் பெட்டி ஒன்றில் 24 மணி நேரத்திற்கும் கூடுதலாக மாட்டிக் கொண்டதாக கூறியுள்ளார். அதனால், கால் வழிக்கும், உடல் சோர்வுக்கும் இலக்கான அவர், பணியாளர்கள் அங்கிருந்து அகன்றதும், கோபுரத்தின் உச்சி நோக்கி முன்னேறியுள்ளார். அந்த 53 மாடி உயரம் கொண்ட கட்டடத்தின் உச்சிலை அடைந்த போது, பிரமிக்கத்தக்க அழகை தாம் கண்டதாகவும் Angela குறிப்பிட்டுள்ளார்.