Latestமலேசியா

மேடைப் படைப்பில் பெண்களுக்குத் தடை; திரங்கானு அரசின் உத்தரவு பிற்போக்குத்தனமானது – கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் சாடல்

கோத்தா கெமுனிங், ஆகஸ்ட்-7, திரங்கானுவில் ஆலய விழாக்களில் பெண்களின் மேடைப் படைப்புகளுக்குத் தடை விதித்தும், கால்பந்தாட்ட அரங்கில் ஆண்களையும் பெண்களையும் பிரித்து அமர வைத்தும் உத்தரவு பிறப்பித்த மாநில அரசின் நடவடிக்கை மிகவும் பிற்போக்குத் தனமானது.

சிலாங்கூர், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் செம்புநாதன் அவ்வாறு கடுமையாகச் சாடியுள்ளார்.

பல்லின மக்களை அரவணைத்துச் செல்லும் மலேசிய உணர்வை அது பிரதிபலிக்கவில்லை என அறிக்கையொன்றில் அவர் சுட்டிக் காட்டினார்.

குறிப்பாக Guan Di சீன கோவியிலில் பெண் கலைஞர்களின் மேடைப் படைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கான காரணம் அடிப்படையற்றது.

அது கலைப்பணியாற்றுவதில் பெண்களின் உரிமையை மறுக்கும் செயல் என்பதோடு, பல்லின கலைக் கலாச்சார பகிர்வுக்கு எதிரான என பிரகாஸ் சொன்னார்.

அதோடு, கால்பந்தாட்ட அரங்கில் பெண்களைத் தனியே அமர வைப்பதும் ஏற்புடையதல்ல.
இனம-மத வேறுபாடு மட்டுமல்ல, பாலின வேறுபாடுக்கும் அப்பாற்பட்டது விளையாட்டு; அதில் இதுபோன்ற தேவையற்ற உத்தரவுகள் சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும் என்பதோடு, சகிப்புத் தன்மையையும் பாதிக்கும்.

எனவே, இது போன்ற பிற்போக்குத் தனமான, நியாயமற்ற உத்தரவுகளை திரங்கானு அரசாங்கம் மீட்டுக் கொள்ள வேண்டும்; சமூகப் பண்பாட்டு முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள பழங்காலத்துக் கொள்கைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு தனிமனிதரும், பாலின பாகுபாடின்றி பேச்சுரிமையை அனுபவிக்கவும், கலைப்பணியாற்றவும் அனுமதிக்கப்பட வேண்டும்.

அனைவரையும் அரவணைத்து, நியாயமாக நடத்தி, முன்னோக்கிச் செல்வதே நமது பண்பாக இருக்க வேண்டுமென பிரகாஸ் செம்புநாதன் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!