Latestமலேசியா

மேம்பால திட்டத்தினால் நிலம் – வீடுகள் பாதிப்பு இழப்பீடு கோரி பிரதமர் அலுவலகத்தில் குடியிருப்பு வாசிகள் மகஜர் வழங்கினர்

புத்ரா ஜெயா, மே 17 – கிழக்குக்கரை நெடுங்சாலை திட்டத்தின் பால நிர்மாணிப்பினால் பாதிக்கப்பட்ட தங்களது நிலம் , வீடுகள் மற்றும் சிறுதொழில் கடைகளுக்கு இழப்பீடு கோரி, கிள்ளான் கம்போங் ஜாவா, பத்து அம்பாட் குடியிருப்பு வாசிகளில் சுமார் 60 பேர் இன்று புத்ரா ஜெயாவிலுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அலுவலகத்தில் மகஜர் சமர்ப்பித்தனர். 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின்போது அப்போதைய நில மதிப்பீட்டின்படி நிலம் மற்றும் வீடுகள் மற்றும் கடைகளின் அளவுக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படும் என கூட்டரசு நிலம் மற்றும் கனிம வள தலைமை இயக்குனர் அலுவலக அதிகாரிகள் , மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பாதிக்கப்படும் மக்களுக்கிடையே நடைபெற்ற சந்திப்பில் இணக்கம் காணப்பட்டது. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா மூன்று லட்சம் ரிங்கிட் முதல் ஆறு லட்சம் ரிங்கிட்வரை இழப்பீடு வழங்குவதற்கு WCE மேம்பாட்டு நிறுவனத்துடன் இணக்கம் காணப்பட்டது. அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு மீண்டும் புதிய இழப்பீடு தொகை குறித்து பேச்சு நடத்தப்பட்டு இணக்கம் காணப்பட்டது.

எனினும் பாதிக்கப்பட்ட சுமார் 200 பேருக்கு இதுவரை இழப்பீடு எதுவும் கிடைக்கவில்லை. இந்த வேளையில் திடீரென இந்த ஆண்டு நில உரிமையாளர்களுக்கு நிலத்தின் அளவுக்கு ஏற்பவே இழப்பீடு வழங்கப்படுமே தவிர நிலத்தின் மேல் உள்ள வீடுகளுக்கோ அல்லது கடைகள் மற்றும் சிறுதொழில் நடைபெறும் கட்டிடங்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துவிட்டதால் அந்த குடியிருப்பு பகுதியிலுள்ள சுமார் 200 பேர் தற்போது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து சிலாங்கூர் மந்திரிபுசார்வரை பிரச்சனையை கொண்டுச் சென்றும் எந்தவொரு தீர்வும் காணப்படவில்லை. இந்த நிலையில்தான் இப்போது இந்த விவகாரம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு இன்று இழப்பீடு கோரும் மகஜர் வழங்கப்பட்டது. மலேசிய நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் கலைவாணர் ஏற்பாட்டில் இந்த மகஜரை பிரதமரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று புத்ரை ஜெயா அலுவலகத்தில் நடைபெற்றது. பிரதமரின் இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி சணமுகம் இந்த மகஜரை பெற்றுக் கொண்டதோடு இந்த விவகாரத்தை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக தெரிவித்தாக பாதிக்கப்பட்ட மக்களின் நடவடிக்கை குழுவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சின்னசாமி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!