பாரீஸ், அக்டோபர்-14, பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான தெஸ்லாவின் மின்சாரக் கார் மேற்கு பிரான்சில் தீப்பற்றிக் கொண்டதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
மரணமடைந்தவர்களில், காரோட்டுநர் மற்றும் பயணிகளான உணவகப் பணியாளர்கள் மூவரும் அடங்குவர்.
அக்கோர விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது; அந்த தெஸ்லா காரை பரிசோதனை செய்வதும் அவற்றில் அடங்குமென போலீஸ் கூறியது.
விபத்துக்கு முன்பாக, படுவேகத்தில் சென்ற அக்கார் சாலைப் பெயர் பலகைகளை மோதியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
மருத்துவக் குழு வந்து சேருவதற்குள் காரிலிருந்த அனைவரும் உயிரிழந்து விட்டனர்.
கோடீஸ்வரர் இலோன் மாஸ்கின் தெஸ்லா நிறுவனம் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பில் தொடர்ந்து பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது.
2018-ல் சிலிக்கோன் பள்ளத்தாக்கில் Tesla Model X ரக கார் விபத்தில் சிக்கி, அதில் உயிரிழந்த பொறியியலாளரின் குடும்பத்துடன், கடந்த ஏப்ரலில் நீதிமன்றத்திற்கு வெளியே தெஸ்லா பிரச்னையை முடித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.