
கோலாலம்பூர், நவ 7 – மைஏர்லைன் விமான நிறுவனம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டுவரும் அதிகாரிகள் மேலும் இருவரை கைது செய்தனர். I-Serve Payment Gateway Sdn Bhd-ட்டின் இணை தோற்றுவிப்பாளரான 58 வயதுடைய ஆடவரும், 57 வயதுடைய பெண்மணியும் கைது செய்யப்பட்டனர். நேற்று அதிகாலை மணி 3.30 அளவில் KLIA 2 இல் உள்ள குடிநுழைவுத்துறை அலுவலகத்தில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார். அந்த ஆடவருக்கு 1995ஆம் ஆண்டில் மைஏர்லைன் தோற்றுவிப்பாளர் அறிமுகமாகியதாகவும் அவர்கள் இருவரும் சேர்ந்து 2019ஆம் ஆண்டு I-Serve நிறுவனத்தை தொடங்கியதாக முன்னோடி விசாரணையில் தெரியவந்திருப்பதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறையின் இயக்குனர் கமிஷனர் டத்தோஸ்ரீ
ரம்லி முகமட் யூசுப் தெரிவித்தார்.
I-Serve நிறுவனத்தின் கீழ் உள்ள பல்வேறு துணை நிறுவனங்களின் இயக்குனராகவும் அந்த சந்தேகப் பேர்வழி இருப்பதாகவும் அவர் கூறினார். கைது செய்யப்பட்ட அந்த சந்தேகப் பேர்வழி நேற்று அதிகாலை மணி 4.15 அளவில் செந்தூலில் உள்ள ஆடம்பர அடுக்கு மாடி வீட்டிற்கு போலீசார் அழைத்துச் சென்றதைத் தொடர்ந்து அங்கு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கமிஷனர் ரம்லி கூறினார்.