
கோலாலம்பூர், மார்ச் 10 – மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் மீதும், MIED -மாஜு கல்வி மேம்பாட்டு கழகத்தின் மீதும், MACC மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், முறையே 3 விசாரணை அறிக்கைகளை திறந்ததாக, பிரதமர் துறையின் சட்ட விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அசாலினா ஒத்மான் தெரிவித்தார்.
அதில் மைக்கா ஹோல்டிங்ஸ் மீதான ஒரு விசாரணை அறிக்கை, அரசாங்க துணை வழக்கறிஞரின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வேளையில், இரு விசாரணை அறிக்கைகள் முழுமைப்பெற்று விட்ட நிலையில் , 2009 MACC சட்டத்தின் கீழ், எந்தவொரு குற்றச் செயலும் இல்லாதது தெரிய வந்ததாக அமைச்சர் கூறினார்.
இதனிடையே, MIED – யின் ஒரு விசாரணை அறிக்கை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு விட்டதாகவும், இரு விசாரணை அறிக்கைகள் முழுமைப் பெற்று விட்டதாகவும் அவர் மேலும் கூறினார். அவ்விரு விசாரணை அறிக்கைகளில் எந்தவொரு குற்றச் செயலுல் இல்லாதது தெரிய வந்தது.
இவ்வேளையில் , MITRA – மலேசிய இந்தியர் உருமாற்றுத் திட்டம் தொடர்பாக திறக்கப்பட்ட 10 விசாரணை அறிக்கைகள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு விட்டதாக அசாலினா ஒத்மான் குறிப்பிட்டார்.
மைக்கா, மித்ரா, எம்.ஐ.இ.டி ஆகியவை மீதான சுயேட்சை கணக்காய்வினை அரசாங்கம் எப்போது மேற்கொள்ளுமென ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் எழுப்பிய கேள்விக்கு , மக்களவையில் அமைச்சர் எழுத்துப்பூர்வமான அந்த பதிலை வழங்கினார்.