
ஈப்போ, ஏப்ரல் 4 – வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 264ஆவது கிலோமீட்டரில் மொனோரா சுரங்கப்பாதையின் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் கர்ப்பிணி தாய் ஒருவரை மோதியதாக நம்பப்படும் சிவப்பு நிற வாகன ஓட்டுனர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
25 வயதுடைய அந்த கர்ப்பிணிப் பெண்ணை வாகனம் ஒன்று மோதியதை dashcam கேமராவில் பதிவான சம்பவம் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து , அச்சம்பவத்திற்கு பின் அங்கிருந்து தப்பியோடிய சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர் தேடப்படுவதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ஆபாங் ஸைனால் அபிடின் அபாங் அகமட் ( Abang Zainal Abidin Abang Ahmad ) கூறினார்.
மாலை மணி 6.30 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தில் காயம் அடைந்த அந்த கர்ப்பிணிப் பெண் ஈப்போ Raja Permaisuri Bainun மருத்துவமனையின் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மறுநாள் காலை 9. 30 மணியளவில் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
அந்த பெண்ணின் 2 வயது பெண் குழந்தை தலையில் ஏற்பட்ட காயத்தினால் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தது. மரணம் அடைந்த அந்த கர்பிணி Perodua Bezza காரின் முன்புறம் பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த வேளையில் அக்காரை 29வயதுடைய ஆடவர் ஓட்டிச் சென்றுள்ளார். இக்கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதியபின் கால்வாயில் கவிழ்ந்தது. கார் ஓட்டுனர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார் என ஆபாங் ஸைனால் தெரிவித்தார்.