ஜகார்த்தா, ஜூலை 20 – இந்தோனேசிய கடல் பகுதியில் மோசமான வானிலை காரணமாக கப்பல் மூழ்கியதில் 13 பேர் காணாமல் போயிருக்கின்றனர். 64 பேரை மீட்புக் குழுவினர் காப்பாற்றிக் கரை சேர்த்துள்ளனர்.
கேஎம் சாஹாயா அராஃபா (KM Cahaya Arafah) எனும் அக்கப்பல், சம்பவத்தின் போது கப்பல் பணியாளர்கள் உட்பட 77 பேரை ஏற்றியிருந்தது. ஹல்மாஹேரா (Halmahera) தீவு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது அது கடலில் மூழ்கியதாக மீட்புக் குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு அருகிலுள்ள தோக்காக்கா (Tokaka) கிராமத்து மக்கள், விஷயத்தைக் கேள்விப்பட்டதும் தங்கள் படகுகளைப் பயன்படுத்தி, மீட்புப் பணிகளுக்கு உதவினர்.
ஆயிரக்கணக்கான தீவுகள் சூழ்ந்திருக்கும் இந்தோனேசியாவில் கடல் விபத்துக்கள் சர்வ சாதாரணமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆபத்து என்பது தெரிந்திருந்தும் வேறு வழியில்லாததால் அங்கு வசிக்கும் மக்கள் படகு மற்றும் ferry சேவைகளையே அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.