ஆகஸ்ட் -24 – இந்திய பிரதமர் நரேந்திர மோடி யுக்ரேய்னுக்கு மேற்கொண்ட பயணத்தை அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி (Volodymyr Zelensky) வரலாற்றுப் பூர்வ நிகழ்வாக வருணித்துள்ளார்.
1991-ஆம் ஆண்டில் யுக்ரேய்ன் சுதந்திரம் பெற்றப் பிறகு அந்நாட்டுக்கு வருகைப் புரிந்துள்ள முதல் இந்தியப் பிரதமராக மோடி திகழ்வதை சுட்டிக் காட்டி அவர் அவ்வாறு சொன்னார்.
மோடியின் கீழ் பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள இந்தியா, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ரஷ்யாவை போர் நிறுத்தத்திற்கு உடன்பட வைக்க வேண்டுமென்றும் செலன்ஸ்கி கேட்டுக் கொண்டார்.
முன்னதாக பேசிய மோடி, பலரும் நினைப்பது போல் ரஷ்யா-யுக்ரேன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என தெளிவுப்படுத்தினார் .
எப்போதுமே ஒரு தெளிவான நிலைப்பாட்டை நாங்கள் எடுத்து வந்துள்ளோம்; இப்போதும் அமைதியின் பக்கமே நிற்கிறோம், போர் ஒரு தீர்வல்ல என மோடி கூறினார்.
கடந்த மாதம் ரஷ்யாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது கூட, அதிபர் விளாடிமிர் புடினிடம் (Vladimir Putin) அதனைத் தாம் வலியுறுத்தியதை மோடி சுட்டிக் காட்டினார்.
பேச்சுவார்த்தைகளின் மூலமே பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியுமென வலியுறுத்திய நரேந்தி மோடி, அதில் தன்னால் ஆன அனைத்தையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாகச் சொன்னார்.
மோடி – செலன்ஸ்கி சந்திப்பின் போது இந்தியாவும் யுக்ரேய்னும் பல்வேறு துறைகளில் 4 கருத்திணக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.