
கோலாலம்பூர், ஆக 21 – ம.இ.காவின் புதிய தலைமையக கட்டிட அடிக்கல் நாட்டு விழா அக்கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ S .A. விக்னேஸ்வரன் தலைமையில் மிகவும் கோலாகலமாகவும் சிறப்பாகவும் இன்று காலை நடைபெற்றது. துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி, இந்தியத் தூதர் பி.என் ரெட்டி , ம.இ,கா வின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், ம.இ,காவின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம், டத்தோ டாக்டர் மாரிமுத்து உட்பட திரளானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இப்போதிருக்கும் ம.இ.கா தலைமையகத்தின் எட்டு மாடி கட்டிடத்திற்கு பதிலாக இரட்டை கோபுரம் அமைப்பில் ஒரு கட்டிடம் 35 மாடிகளைக் கொண்டு அமைக்கப்படவுள்ளது. அவற்றில் அலுவலகமும் , தங்கும் விடுதியும் நிர்மாணிக்கப்படவிருப்பதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார். அதனை அடுத்து 45 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு வசதியைக்கொண்ட மற்றொரு கட்டிடமும் அமைக்கப்படவிருக்கிறது.
அந்த கட்டிடத்தில் சுமார் 3,500 பேர் அமரக்கூடிய மாநாட்டு மண்டபமும் நிர்வமாணிக்கப்படவுள்ளது. அதோடு 8 மாடிகளில் வாகனம் நிறுத்துமிடமும் தரைப்பகுதியில் வணிக கடைகளும் அமைக்கப்படவிருப்பதாக அவர் கூறினார். ம.இ.காவின் 70 ஆண்டு கால அரசியல் பயணத்தில் கட்சிக்கு புதிய அடையாளச் சின்னமாக இந்த தலைமையக கட்டிடம் அமையவிருக்கிறது. அதோடு ம.இ.காவின் அடையாளமாக மட்டுமின்றி, மலேசிய இந்திய சமூகத்தின் எதிர்கால தலைமுறையினருக்கு ஓர் ஊன்றுகோலாகவும் இந்த புதிய கட்டிடம் அமையும் என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இதனிடையே புதிதாக நிர்மாணிக்கப்படவிருக்கும் ம.இ.காவின் தலைமையக கட்டிடம் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளிலேயே உயரமான கட்டிடமாக திகழும் என ம.இ.காவின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் தலைமை குருக்கள் சிவக்குமார் தலைமையில் 15 குருமார்கள் இன்று காலை சிறப்பு பூஜையை நடத்தினர். அதனை தொடர்ந்து புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
ம.இ.காவின் தேசிய பொருளாளரும் கட்டிடக் குழு தலைவருமான டான்ஸ்ரீ ராமசாமி , உதவித் தலைவர்களான டத்தோ .டி மோகன், டத்தோ அசோஜன், டத்தோ டி.முருகையா, டத்தோஸ்ரீ வேள்பாரி, டத்தோ கோகிலன் பிள்ளை , ம.இ.கா கல்விக் குழுத்தலைவர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன், மத்திய செயற்குழு உறுப்பினர்கள் , தொகுதி தலைவர்கள் மற்றும் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா உட்பட அழைக்கப்பட்ட பல பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.